மகளிர் கிரிக்கெட்; இந்திய அணி இமாலய வெற்றி
மூவர் அரை சதம், ஜெமிமா மிரட்டல் சதம்; பணிந்தது அயர்லாந்து

ராஜ்கோட், ஜன.13; அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், முதலில் விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, புதுமுக வீராங்கனை பிரத்திகா ராவல், அனுபவமிக்க ஹர்லீன் தியோல் ஆகியோர் தலா அரை சதமும், ஜெமிமா ரோட்ரிக் அசத்தல் சதமும் அடித்தனர்.
இமாலய இலக்கு; அயர்ந்த அயர்லாந்து

இதன் வாயிலாக 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 370 ரன்களை குவித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி சீராக ரன்கள் சேர்த்தபோதிலும், இந்தியா நிர்ணயித்த இலக்கை விரட்டிப்பிடிக்கும் வகையில் ஆட்டமில்லை. அயர்லாந்து அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு நாள் போட்டியில் முதல் சதம் கண்ட இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதைப் பெற்றார்.







