மன்மோகன் சிங் நினைவிடம் தொடர்பாக சர்ச்சை
காங்கிரஸ்-பாஜக மோதல்; காங்., மீது பிரணாப் மகள் சாடல்

டெல்லி, டிச.28 ; முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைந்த பிறகு காங்கிரஸ் கட்சி, காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்டுவதற்குக்கூட கவலைப்படவில்லை என்று அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த மன்மோகன் சிங் நினைவேந்தல் சலசலப்புக்கு மத்தியில் ஷர்மிஸ்தா இவ்வாறு சாடியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் இடத்திலேயே அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டுமென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
நினைவிடம் அமைக்க உறுதி

பின்னர் வெளியிடப்பட்ட மத்திய அரசின் செய்திக்குறிப்பில், மறைந்த மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கு இடம் ஒதுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி கூறியுள்ளதாகவும், அதே நேரத்தில் தகனம் மற்றும் இறுதிச்சடங்குகளை இடைப்பட்ட நேரத்தில் தொடரலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை இதுரவை கண்டறிய முடியவில்லையா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் ஒருவர், காங்கிரஸ் மலிவான அரசியலில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
காங்கிரஸ், பாஜக மோதல்

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மறைந்த பிறகு காங்கிரஸ் எவ்வாறு நடந்து கொண்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று, பாஜகவின் அந்த மூத்த தலைவர் விமர்சனம் செய்திருந்தார்.
பிரணாப் முகர்ஜி மகள் விமர்சனம்

இதனிடையே பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா, காங்கிரசை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தனது தந்தை பிரணாப் முகர்ஜி மறைந்த பின்னர் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்டுவதற்குக் கூட காங்கிரஸ் கவலைப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் 4 பேர் இயற்கை எய்தியபோதும் கூட அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியதில்லை என்று, மூத்த தலைவர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஷர்மிஸ்தா வேதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மறைந்த மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தான் ஆதரிப்பதாக பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா தெரிவித்துள்ளார்.







