கலைஞர் கனவு இல்லம் – ரூ. 3,500 கோடியில் 1,19,000 கான்க்ரீட் வீடுகள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அடுத்த மார்ச் மாதத்திற்குள் 3500 கோடி ரூபாய் செலவில் 1,19,000 கான்க்ரீட் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது.
வருகின்ற 2030க்குள் ‘குடிசையில்லா தமிழகம்’ உருவாக்கிட கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்க தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு 2024- 25 ஆம் ஆண்டுக்கான ஒரு லட்சத்து 19 ஆயிரம் கலைஞர் கனவு இல்லம் கட்டும் பணி 85 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளது. 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும் என ஊரக வளர்ச்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டின் மதிப்பு, சுமார் 3.5 லட்ச ரூபாய் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு இல்லாதவர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் சுமார் ஒரு லட்சம் வீடுகளை மறுசீரமைக்க செய்ய 2000 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கீடு செய்து தற்போது அந்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.






