டிரம்ப் அமைச்சரவையில் தமிழருக்கு உயர் பதவி!
ஏ.ஐ., தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமனம்

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அறிவியல் தொழில்நுட்பத்தின் முதுநிலை ஆலோசகராக சென்னையை சேர்ந்த தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் வாகை சூடிய குடியரசு கட்சி வேட்பாளரான, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தமது அமைச்சரவையில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அதன்படி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்பட பல்வேறு பிரிவினருக்கு தமது அரசின் முக்கிய பொறுப்புகளை வழங்கி உள்ளார். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்ட பலரும் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழகத்தின் சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமித்துள்ளார் டிரம்ப். அமெரிக்காவில் தொழில் முனைவராக உள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர். எழுத்தாளர், முதலீட்டாளர் உள்பட பல்முக திறன்மை கொண்ட இவர், மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

பிரபல தொழிலதிபர் டேவிட் சேக்ஸ் உட்பட பல்துறை அறிஞர்களுடன் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ.,க்கான அமெரிக்க தலைமைப் பொறுப்பை கவனிப்பார் என்று டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். அமெரிக்க அரசின் ஏ.ஐ., கொள்கையை வடிவமைக்க இருக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசனைக் குழுவிலும் இடம் பெறுவார் என்றும் டொனால்ட் டிரம்ப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.








