“மெடல் ஆப் பிரீடம்” விருதுகள் அளிப்பு
தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்கு கடும் எதிர்ப்பு

அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திர பதக்கத்தை, ஹிலாரி கிளிண்டன் உள்பட 19 பேருக்கு வழங்கி அதிபர் ஜோ பைடன் கவுரவித்தார். இதில் தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்கு “மெடல் ஆப் பிரீடம்” விருது வழங்கியதற்கு குடியரசு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னேற்றம், உள்நாட்டு பாதுகாப்பு, உலக அமைதிக்கு பங்களிப்பு, அரசியல், கலை, சினிமா, விளையாட்டு உள்ளிட்டவற்றில் சாதித்தவர்களை போற்றும் வகையில், ஆண்டுதோறும் மிக உயரிய விருதாக சுதந்திர பதக்கம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் ‘மெடல் ஆப் பிரீடம்’ விருதுக்கு 19 நபர்கள் தேர்வாகி இருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

நேற்று, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அப்போது வழக்கறிஞராக குழந்தைகள் உரிமைகளை பாதுகாத்ததற்காகவும், பெண்களின் உரிமையும் மனித உரிமைதான் என அறிவித்ததற்காகவும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு விருது வழங்கப்பட்டது.

கலைத்துறையில் ஆற்றிய சேவைகளுக்காக நடிகர்கள் மைக்கேல் பாக்ஸ், டென்சல் வாஷிங்டன் உள்ளிட்டோருக்கு ‘மெடல் ஆப் பிரீடம்’ விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல கால்பந்து வீரரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சியும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் வேறு பணிகள் காரணமாக அவரால் விழாவில் நேரில் பங்கேற்க முடியவில்லை.

அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஜார்ஜ் சோரஸுக்கு பதிலாக அவரது மகன் அலெக்ஸ் சோரஸ் விருதை பெற்றுக் கொண்டார். அப்போது, தமது தந்தை அமெரிக்காவின் தேச பக்தர் என்றும், சுதந்திரம் மற்றும் மனித உரிமைக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்ததாகவும் குறிப்பிட்டார்.

ஹங்கேரியில் யூத குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ் சோரஸ் உலகம் முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவருக்கு’மெடல் ஆப் பிரீடம்’ விருது வழங்கியதை, அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜார்ஜ் சோரசுக்கு விருது வழங்கப்பட்டது அமெரிக்காவின் முகத்தில் அறையப்பட்ட மற்றொரு அடி என குடியரசு கட்சியின் முக்கிய தலைவர் நிக்கி ஹாலே கூறி உள்ளார். இதேபோல் பிரபல தொழிலதிபரும், குடியரசு கட்சி ஆதரவாளருமான எலான் மஸ்க், இதை கேலிக்குரிய நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.

தமக்கு சொந்தமான, ‘ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்’ அறக்கட்டளை வாயிலாக, உலகின் பல்வேறு நாடுகளுக்கும், நன்கொடை வழங்கி வருகிறார் ஜார்ஜ் சோரஸ். இதில் ஜனநாயக நடவடிக்கைகளுக்கான நிதி என்ற பெயரில், சம்மந்தப்பட்ட நாடுகளின் தேர்தல் நடைமுறைகளில் ஜார்ஜ் சோரஸ் தலையிடுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் குடியரசு கட்சியினர் ஜார்ஜ் சோரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.








