தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு
குடும்ப நல நீதிமன்றம் அறிவிப்பு

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில் நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் டிவிட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.
தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கின் விசாரணைக்கு தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் கடந்த 3 முறையாக ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு இன்று காலை 10:30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஸ்வர்யா ஆஜரான நிலையில், தனுஷ் தாமதமாக பிற்பகல் 12 மணிக்கு வந்திருந்தார். பின்னர் இருவரும் நீதிபதி முன்பு ஆஜரானார்கள்.
அப்போது, நடிகர் தனுஷ் தரப்பில், வழக்கறிஞர் கெளதம் S ராமன், ஐஸ்வர்யா தரப்பில், வழக்கறிஞர் இளம்பாரதி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் வழக்கு தொடர்பாக முடிவெடுக்க நீதிபதி அறிவுறுத்தினார். சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தாங்கள் பிரிந்து வாழவே விரும்புவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் உறுதியாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக இரு தரப்பிடமும் கையெழுத்து பெற்ற பின், வழக்கில் வரும் நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.







