ஆட்டமிழக்க பயன்படுத்திய பந்திலேயே ‘ஆட்டோகிராப்’
கோலியின் செயலால் கிளீன் போல்டான பவுலர் சங்வான்

டெல்லி, பிப்.02; ரஞ்சி கோப்பை போட்டியில், தன்னை ஆட்டமிழக்க பயன்படுத்திய பந்திலேயே விராட் கோலி ஆட்டோகிராப் இட்டு, ரயில்வே பந்து வீச்சாளர் ஹிமான்ஷு சங்வானை நெகிழ வைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் அம்மாநில அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் கோலி, 6 ரன்கள் எடுத்திருந்தபோது ரயில்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹிமான்ஷு சங்வானின் பந்தில் கிளீன் போல்டானார்.
இதன்மூலம் மறுநாள் நாளேடுகளின் தலைப்புச் செய்திகளில் சங்வான் இடம்பிடித்தார்.
கோலி போல்டு.. ஆனாலும், டெல்லி அணி வெற்றி..!

விராட் கோலியின் அற்புதமான இன்னிங்சை எதிர்பார்த்து வந்திருந்த ரசிகர்களுக்கு, அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தாலும், டெல்லி அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால், மகிழ்ச்சி அடைந்தனர்.
போட்டிக்குப் பின்னர், ரயில்வே பந்துவீச்சாளர் ஹிமான்ஷு சங்வான், விராட் கோலியை அணுகி, அவரது வாழ்த்துகளைப் பெற்றார்.
தன்னை ஆட்டமிழக்க பயன்படுத்திய பந்திலேயே கோலி ‘ஆட்டோகிராப்’

அப்போது தன்னை ஆட்டமிழக்க சங்வான் பயன்படுத்திய அதே பந்தில் விராட் கோலி கையெழுத்திட்டு பாராட்டினார்.
“இது என்ன ஒரு பந்து; இது ஒரு அழகான பந்து. நான் அதை மிகவும் ரசித்தேன்!” என்று கோலி பந்தில் ஆட்டோகிராப் போடுவதற்கு முன் கூறினார்.
மேலும், “ரயில்வே அணிக்காக விளையாடி வரும் உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன், நீங்கள் ஒரு நல்ல பந்துவீச்சாளர் என்றும் அறிந்தேன், உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்” என கோலி தன்னைப் பாராட்டியதாக ஹிமான்ஷு சங்வான் தெரிவித்துள்ளார்.







