‘கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது’ என்ற பேச்சால் சர்ச்சை

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போர்க்கொடி

சென்னை,மே.28; கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விளம்பர நிகழ்வு சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

“உயிரே உறவே தமிழே” எனப் பேசத் தொடங்கிய கமல்

இதில் பேசிய கமல்ஹாசன், “உயிரே உறவே தமிழே” என்ற சொற்றொடருடன் தனது உரையைத் தொடங்கினார். அதாவது “என் வாழ்க்கையும் என் குடும்பமும் தமிழ் மொழி; கன்னட மொழி தமிழிலிருந்து பிறந்தது” என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

பட விழாவில் பங்கேற்ற பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமாரை குறிப்பிட்டுப் பேசிய கமல்ஹாசன், “அவர், வேறொரு மாநிலத்தில் வசிக்கும் எனது குடும்பத்தவர், அதனால் தான் அவர் இங்கே வந்திருக்கிறார் ,

ஆகையால்தான் நான் என் உரையைத் தொடங்கியபோது, ​​’என் வாழ்க்கையும் என் குடும்பமும் தமிழ்’ என்று சொன்னேன். உங்கள் மொழி (கன்னடம்) தமிழிலிருந்து பிறந்தது. எனவே நீங்கள் அந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள்” என்று கமல்ஹாசன் பேசினார்.

கன்னடம் பற்றிய கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிர்ப்பு

அவரது இந்தப் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று கன்னட மொழி ஆதரவு குழுக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

கன்னட ரக்ஷண வேதிகே போன்ற கன்னட ஆதரவு அமைப்புகள் இந்தக் கருத்துகளை வன்மையாகக் கண்டித்துள்ளன. கமல்ஹாசன் தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பெங்களூருவில் ‘தக் லைஃப்’ பதாகைகளை கிழித்து எதிர்ப்பு

பெங்களூருவில் கன்னட ஆதரவு ஆர்வலர்கள் ‘தக் லைஃப்’ படத்தின் விளம்பரப் பதாகைகளைக் கிழித்து, கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கூறுகையில், “தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது மற்றும் கன்னடத்தை விட தமிழ் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறினார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம், நீங்கள் கன்னடத்தை அவமதிக்கிறீர்கள், உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்று எச்சரிக்கிறோம்” என்று பிரவீன் தெரிவித்துள்ளார்.

“கமலின் பேச்சு ஆணவத்தின் உச்சம்” என பாஜக சாடல்

பாஜக கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார். கன்னடம் குறித்த அவரது கருத்து “ஆணவத்தின் உச்சம்” என்று வசைபாடியுள்ளார். கலைஞர்கள் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்,

மேலும் தமிழைப் புகழ்ந்து நடிகர் சிவராஜ்குமாரை அழைத்து கன்னடத்தை அவமதித்ததாக கமல்ஹாசனை விஜயேந்திரா கடுமையாகச் சாடினார்.
கன்னட மொழிக்கு 2,500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் உள்ளது என்றும், இதுபோன்ற கருத்துகளால் அதைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x