வசூலை அள்ளுவதில் ‘மாமன்’ கெட்டிக்காரன்..!
'நெக்ஸ்ட் லெவல்'-க்குச் செல்கிறாரா நடிகர் சூரி?

சென்னை, மே.21; நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘மாமன்’ திரைப்படம் கணிசமாக வசூலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரியை விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக்கினார் இயக்குநர் வெற்றிமாறன். பின்னர் விடுதலை -2ஆம் பாகமும் சூரிக்கு பெயர் பெற்றுத்தந்தது.
சூரி கதையின் நாயகனாக வரும் ‘மாமன்’ படத்திற்கு வரவேற்பு

தொடர்ந்து கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களிலும் கதையின் நாயகன் வேடம் தரித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார், நடிகர் சூரி.
இதன் தொடர்ச்சியாக, சூரியே கதை எழுதி, பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியிருக்கும் மாமன் என்ற படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது.
உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளைக் கொண்ட படம் ‘மாமன்’

ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி, பாபா பாஸ்கர், நிகிலா சங்கர், கீதா கைலாசம், பால சரவணன், விக்கி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அக்கா-தம்பி, மாமன்-மருமகன் உறவை மையமாக வைத்து உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருக்கும் ‘மாமன்’ படத்தை குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்கள் பார்க்கத் தொடங்கி உள்ளனர் என்று படத் தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது.
‘மாமன்’ படம் இதுவரை சுமார் ரூ.10 கோடி வசூல்?

சூரியின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருவதாக பேசப்படுகிறது.
கடந்த ஞாயிறன்று இப்படம் சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்த திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாமன் படம் மொத்தம் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சந்தானம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் நகைச்சுவை காட்சிகள் பெரியளவில் கைகொடுக்கவில்லை என்று ரசிகர்கள் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ வசூலை ‘மாமன்’ படம் முந்தியதா?

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ வசூலை சூரியின் ‘மாமன்’ படம் முந்தியுள்ளதாக திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது. மாமன் படம் வெற்றி பெற்றுவிட்டதாக கூறப்படுவதால் நடிகர் சூரி அடுத்த கட்டத்திற்கு, அதாவது ‘நெக்ஸ்ட் லெவலு’க்குச் சென்றுவிட்டார் என்றும் பேசிக் கொள்கின்றனர்.
ஆனாலும், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்கள் எவ்வளவு வசூலித்துள்ளன என்பதை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும் என்று பேசப்படுகிறது.







