பஸ்களுக்கான வெப்சைட், மொபைல் ஆப் தொடக்கம்

ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவுத் திட்டத்தில், மேம்படுத்தப்பட்ட TNSTC இணையதளம் மற்றும் TNSTC கைபேசி செயலியினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பணியின் போது இறந்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பணியாளர்களின் 14 வாரிசுதாரர்களுக்கும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பணியாளர்களின் 3 வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையிலான ஓட்டுநர், நடத்துநர் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு பொதுப்போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் (TNSTC) மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவுத் திட்டத்திற்காக (OTRS) போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்று தொடக்கி வைத்தார். இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) மற்றும் TNSTC பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலி, தினசரி 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில் பயணிகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வசதிகளை கொண்டுள்ளது. இது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் முன்பதிவு செயல்முறையை சீராக்குகிறது. மேலும், பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்திலும் அல்லது TNSTC கைபேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கவும் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறை செயலாளர், மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனிருந்தனர்.






