ஏ.ஆர். ரகுமானை பிரிகிறேன் – மனைவி சாய்ரா பானு அறிவிப்பு
முடிவுக்கு வந்த 29 ஆண்டு பந்தம்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உடனான திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது மனைவி சாய்ரா பானு. கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கதிஷா, ரஹிமா என்ற மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கணவர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக, மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதோடு, இந்த பிரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து அறிக்கை ஒன்றும் வெளியாகி இருக்கிறது.
சாயிரா பானு சார்பில் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து,கணவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டது”.
“இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவானது. இந்த இடைவெளியை யாராலும் சரி செய்ய முடியாது. ஏ.ஆர். ரஹ்மானை பிரிவது என்ற வேதனை, சோகமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். இந்த சவாலான நேரத்தில், வாழ்க்கையில் கடுமையான காலகட்டத்தை கடந்து செல்லும் எங்களின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்கள் அர்த்தத்தை தேடுகிறோம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக தெரிவித்துள்ளார். மனைவியின் பிரிவு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மிகப்பெரிய 30-ம் ஆண்டுக்குள் நுழைவதை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எல்லா விஷயங்களும் ஒரு எதிர்பாராத முடிவை சுமந்திருக்கின்றன. நண்பர்களே நாங்கள் இந்த பலவீனமான அத்தியாயத்தைக் கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி” என கூறியுள்ளார்.

இதனிடையே, பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம் என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப் பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவைக் கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்” என கூறியுள்ளார்.







