179 பேரை பலிகொண்ட தென்கொரிய விமான விபத்து
விசாரணைக்கு உதவ புலனாய்வுக்குழுவை அனுப்பும் அமெரிக்கா

தென்கொரியா, டிச.30 ; தென்கொரியாவில் நேற்று நிகழ்ந்த கொடூரமான விமான விபத்தில் 179 பயணிகள் உயிரிழந்தனர். 2 பேர் உயிர் பிழைத்தனர். விபத்து குறித்த விசாரணைக்கு உதவிட அமெரிக்க உறுதியளித்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து பயணிகள், சிப்பந்திகள் உள்ளிட்ட 181 பேருடன் புறப்பட்ட (jeju) ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், தென்கொரியாவில் உள்ள முவான் நகர சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கும் இந்த பயங்கர விபத்து நேரிட்டது.
தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது

விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி சென்று தீப்பிடித்து எரிந்து வெடித்துச்சிதறியது. இதனையடுத்து மீட்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டு, மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், விமானத்தில் வந்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்துவிட்டதாக தென்கொரிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். விமான சிப்பந்திகள் 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு கோபுரம் பகுதியில் உள்ள பறவைகள் குறித்து விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தோரின் உறவினர்கள் கதறல்

விபத்துக்குள்ளான போயிங் 737-800 விமானம் மிகவும் பாதுகாப்பானது எனப் பட்டியலிடப்பட்ட வகையைச் சேர்ந்ததாகும். தென்கொரியாவில் மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கும் ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த விமானத்தை இயக்கி வருகிறது.
விபத்து குறித்து தகவலறிந்ததும், விமானத்தில் வந்த பயணிகளின் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக, முவான் விமானநிலையத்தில் குவிந்தனர். அவர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று தென்கொரிய விமான போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விசாரணைக்கு உதவிட அமெரிக்கா உறுதி

விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விபத்திற்கான காரணம் குறித்து முழுமையாக கண்டறிய ஆண்டுகள் ஆகலாம் என்றும், அதுவரை காரணங்களை ஊகிக்க வேண்டாம் எனவும் தென்கொரிய விமானப் போக்குவரத்து துறை நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், விசாரணைக்கு உதவிட தங்கள் நாட்டு மத்திய புலனாய்வுக் குழுவினர் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
179 பேரை பலிகொண்டு இந்த விமான விபத்து தென்கொரியாவில் கடந்த 25 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் 1997ஆம் ஆண்டு கொரியன் ஏர்லைன்ஸ் போயிங் விமானம் குவாம் காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 228 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.







