தொடரே முடிந்தும், முடிவுக்கு வராத சர்ச்சை..!
ஷிவம் துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா விளையாடிய விவகாரம்

மும்பை, பிப்.03; இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரே முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், நான்காவது போட்டியில் ஷிவம் துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா விளையாட அனுமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.
நேற்று (பிப்ரவரி.03)இரு அணிகளுக்கும் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி கவனத்தை ஈர்த்தபோதிலும் பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஒரு சில இந்தியர்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து விவாதித்தனர்.
தொடர்ந்து விமர்சிக்கப்படும் ஹர்ஷித் ராணா விவகாரம்

ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், “இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க சுயாதீன போட்டி நடுவர்கள் கொண்டு வரப்பட்டனர்; நடுநிலை தவறிய நடுவர்களை போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பதன் மூலம் ஐசிசி, சார்பு நிலை மற்றும் ஊழலின் மோசமான பழைய நாட்களுக்கு திரும்புகிறது” என விமர்சித்துள்ளார்.
ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட் கடும் விமர்சனம்

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சனின் கருத்துக்கு பதிலளித்த பிராட், ஷிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா போன்றவர் இல்லை என்று கூறியதை முற்றிலும் ஏற்பதாகக் கூறியுள்ளார்.
“இந்திய மாற்று வீரரை அனுமதிப்பதில் இருந்து ஒரு இந்திய போட்டி நடுவர் எப்படி தப்பிக்க முடியும்? போட்டி நடுவர்கள் சார்புநிலையை தவிர்க்க சுதந்திரமாக இருக்க வேண்டும்; இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என கிறிஸ் பிராட் பதிவிட்டுள்ளார்.
மிகவும் மதிக்கப்படும் ஐசிசி நடுவர்களில் ஒருவர் பிராட்

விளையாட்டில் மிகவும் மதிக்கப்படும் ஐசிசி நடுவர்களில் ஒருவரான கிறிஸ் பிராட், சர்வதேச அளவில் இதுவரை 622 ஆட்டங்களில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
அதிக போட்டிகளில் பங்கேற்ற நடுவர்கள் பட்டியலில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லே (798) முதலிடத்திலும், நியூசிலாந்தின் ஜெஃப் குரோவ் (656) இரண்டாவது இடத்திலும், கிறிஸ் பிராட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.







