“திருப்பரங்குன்றம் விவகாரம் பாஜகவின் வெறுப்பு அரசியல்”
மதுரை எம்பி சு.வெங்கடேசன் பகிரங்க குற்றச்சாட்டு

மதுரை, பிப்.06; திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பப்பட்டுள்ள பிரச்னை முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ அல்லது சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற கடுமையாக முயற்சி செய்து வருகின்றன; 90-களில் இராமகோபாலன் வகையறாக்கள் முயற்சி செய்து தோல்வியடைந்ததை இப்பொழுது ஹெச்.ராஜா, அண்ணாமலை வகையறாக்கள் கையிலெடுத்திருப்பதாக வெங்கடேசன் சாடியுள்ளார்.
“நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு வழங்கிவிட்டன”

திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அறநிலையத்துறைக்கான உரிமை என்ன, சிக்கந்தர் தர்காவுக்கான உரிமை என்ன என்பது குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தீர்ப்பு வழங்கி உறுதிப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
திருப்பரங்குன்றத்து மக்களாலோ, அல்லது சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தாலோ அல்லது தர்கா நிர்வாகத்தாலோ உரிமை சம்பந்தமான பிரச்னை எதுவும் இப்போது எழுப்பப்படவில்லை;
பின்னர் பிரச்னையை எழுப்புவது யார்? ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் அமைப்புகள்தான் ஒன்றாகவும் நன்றாகவும் இருக்கும் ஊரில் மதவெறியை கிளப்பிவிட்டு தங்களின் வாக்கு வங்கியை பலப்படுத்த இதுவொன்றே வழி என இறங்கியிருப்பதாக சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
“மாவட்ட நிர்வாகம், நீதிமன்றங்கள் ஒரு பகுதி“

இவர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிய இடங்களில் எல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள், இவர்களின் செயல்திட்ட நிறைவேற்றத்தின் பகுதியாக இருந்துள்ளன என்பது கசப்பான உண்மை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்திலும் அச்சு அசலாக அதே மாதிரியை இவர்களால் அரங்கேற்ற முடிகிறது என்றால் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்பதே பொருள்; திடீரென இந்த பிரச்னை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது;
பிரச்னையை எழுப்பியது யார் எனக் கேள்வி

இங்கு வழிபாடு சார்ந்த உரிமை பிரச்னை எழுப்பப்பட்டது என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள்; இந்த பிரச்சனையை எழுப்பியது யார்? தர்காவில் கந்தூரி வழிபாட்டு உரிமையில் எந்த அடிப்படையில் காவல்துறை தலையிட்டது. காவல்துறைக்கு புகார் கொடுத்தது யார்?
வருவாய் துறை எந்த அடிப்படையில் இதில் தலையிட்டது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் இந்துத்துவா அமைப்பினரின் நுண் திட்டங்களுக்குள் பொதிந்து கிடக்கிறது என்றும் சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.






