மனைவி மீது போலீசில் நடிகர் ஜெயம் ரவி புகார்

மனைவி ஆர்த்தியிடம் உள்ள தனது உடமைகளை மீட்டு தரக்கோரி, அடையார் காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார். தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக, ஜெயம் ரவி அண்மையில் அறிவித்திருந்தார். இருவரும் தற்போது தனித்தனியே வசித்து வருகின்றனர். விவாகரத்து வழங்கக்கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், மனைவி மீது காவல் நிலையத்தில் இவ்வாறு புகார் அளித்துள்ளார்.

 

ஜெயம் ரவியின் புகார் மனுவில், இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்த்தியின் சொகுசு பங்களா வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டு தரக் கோரியுள்ளார். இந்த விவாகரத்து விவகாரம் சர்ச்சையாகி வரும் நிலையில், ஜெயம் ரவி அளித்த புகாரின் அடிப்படையில், அந்த வழக்கை அடையார் துணை ஆணையர் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு மாற்றி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நீலாங்கரை காவல் நிலையத்தில் CSR பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நீண்ட காலமாக காதலித்து வந்த ஜெயம் ரவியும், ஆர்த்தியும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவருக்குமிடையே பிரச்னை இருப்பதாக அண்மையில் பேச்சு எழுந்தது. இந்நிலையில், மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிந்தார்.

அதில், “நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி, “என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும், என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு, முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என்று  கூறியிருந்தார்.

தம்பதி இடையேயான பிரச்னை இப்போது நீதிமன்றத்தைக் கடந்து காவல்துறை வரை சென்றுள்ளது குறித்து ஜெயம் ரவியின் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x