சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் திருப்பூரைச் சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவாற்றினார்.
அப்போது, மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும், மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 7ஆம் தேதி மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி கார்த்திகேயன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், தனது முழு பேச்சைக் கேட்காமல் அவசர கதியில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், தான் கைது செய்யப்பட்ட போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறப்பட்டது.
தனது பேச்சு மாற்றுத்திறனாளிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காகத்தான் தார்மீக மன்னிப்பு கேட்பதாகவும், தனது பேச்சை பேச்சினை youtube சேனல்களில் எடிட் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, அவருக்கு பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







