உங்கள் படுக்கை அறை சுகாதாரமாக உள்ளதா?

வீட்டுப் பராமரிப்பில் மிக முக்கியமானது படுக்கையறை ஆகும். தொடர்ந்து எட்டு மணி நேரம் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரே இடம் படுக்கையறை மட்டுமே. எனவே, படுக்கையறையை எப்படி பராமரிக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்…
படுக்கை அசுத்தமாவது எப்படி?
குறிப்பிட்ட கிலோ எடையுள்ள ஒரு பஞ்சு மெத்தையை நீண்ட காலம் பயன்படுத்திவிட்டு, மீண்டும் எடைபோட்டுப் பார்த்தால் அதன் எடை அதிகரித்து இருக்கும். நமது உடலிலிருந்து நாள்தோறும் உதிரும் (இறந்த) செல்கள் படுக்கையில் சேகரமாவதே இதற்குக் காரணம். மேலும், பெருக்கும்போதும் மற்ற நேரங்களிலும் காற்றில் மிதந்துவரும் நுண் துகள்கள் படுக்கையில் படிவதாலும் அதிக அசுத்தமாகிறது. இலவம் பஞ்சு மெத்தை ஆரோக்கியத்துக்கு மிக நல்லது என்றாலும், நாம் படுக்கும்போதும் குழந்தைகள் குதிக்கும்போதும் பஞ்சு அழுந்தி சிதைவதால், அது நுண் துகள்களாக வெளியேறி கட்டிலின் அடியில் படியும்.
படுக்கை அறை அசுத்தம்
படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில்தான் அதிக தூசிகள் படிந்திருக்கும். அது போக, திறந்த நிலையில் உள்ள கபோடுகளிலும், லாஃப்டிலும் அதிக தூசிகள் படிந்திருக்கும். மின் விசிறியை அவ்வப்போது துடைக்காவிட்டால், பிளேடுகளின் ஓரங்களில் பெரிய கம்பளிப் பூச்சி அளவுக்கு தூசிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
சுகாதாரமில்லாததால் ஏற்படும் பிரச்னைகள்
படுக்கை அறை தூய்மையாக இல்லையென்றால், சுவாசப் பிரச்னைகள், அலர்ஜி, ஆஸ்மா, அரிப்பு, தோல் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு வழி வகுக்கிறது.
படுக்கை பராமரிப்பு
தினமும் படுக்கை விரிப்புகளை வெளியே எடுத்துச் சென்று நன்கு உதறிவிட்டு உபயோகிக்க வேண்டும். வாரத்துக்கு இருமுறையோ அல்லது ஒரு முறையோ படுக்கை விரிப்புகளையும், தலையணை உறைகளையும் கட்டாயம் மாற்ற வேண்டும். மாதத்துக்கு ஒருமுறையாவது மெத்தையை வேக்வம் க்ளீனர் உதவியுடன் தூய்மைப் படுத்த வேண்டும். சில மாதங்களுக்கு ஒருமுறையாவது படுக்கையை வெய்யிலில் இரு புறமும் திருப்பிப் போட்டு நன்றாக காய வைக்க வேண்டும்.
படுக்கை அறை தூய்மை
தினமும் படுக்கை அறையை நன்றாகப் பெருக்கி துடைக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு முறையாவது கட்டிலை நகர்த்திவிட்டோ, அடியில் படுத்தோ நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கபோடுகளுக்கு கதவுகள் இல்லையென்றால் ஒரு திரைச்சீலையையாவது போட்டு மூடி வைக்க வேண்டும். மின் விசிரியையும் லாஃப்டையும் மாதத்துக்கு ஒரு முறையேனும் கட்டாயம் துடைக்க வேண்டும்.
ஏ.சி. அறையில் உறங்கினால்…
நமது உடல் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தன்னை வைத்திருக்கும். ஏ.சி. அறையில் தூங்கும்போது, உடல் தனது வெப்ப நிலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காக விடிய விடிய போராடிக்கொண்டே இருக்கும். இதனால் ஓய்வெடுக்க முடியாமல் உடல் அதிகமாக சூடேறிப் போகும். எனவே, கோடைக் காலத்தில் மட்டும் – கிட்டத்தட்ட அறை வெப்ப நிலையில் வைத்து ஏ.சி-யைப் பயன்படுத்தலாம். அப்போதும் ஆக்சிஜன் கிடைப்பதற்காக ஒரேயொரு ஜன்னல் கதவையாவது திறந்தே வைக்க வேண்டும். மற்ற காலத்தில் எல்லா ஜன்னல் கதவுகளையும் திறந்து வைத்து காற்றோட்டமாக தூங்குவதே நல்லது. பாதுகாப்புக்கு ஜன்னல்களில் கொசுவலை அமைத்துக்கொள்ளலாம்.







